கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்யும் அல்லது குத்தகைக்கு வழங்கும் எந்த தீர்மானமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த துறைமுகத்தை கடந்த அரசாங்கமே இதனை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்து.
அத்துடன் அதன் பின்னர் ஜப்பானிடம் கடன் பெறவும் அதனூடாக துறைமுகத்துக்கான பொருட்களை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் துறைமுகத்தின் 51 வீதத்தை இலங்கை வசம் வைத்திருப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் 49 வீதமான உரிமையை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டிற்குள் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளினூடாக நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டதாகவும் எவ்வாறாயினும் தாம் துறைமுகத்துக்குட்பட்ட கடற்பகுதியை தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க தீர்மானித்தாகவும் அவர் கூறினார்.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிலையான அபிவிருத்திக்கான திட்டங்களை தாம் வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.