- Advertisement -
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ள மக்களிற்கு உலருணவு வழங்குவதற்காக 4 இலட்சத்து 38 ஆயிரத்து700 ரூபாவிற்கான ஒதுக்கீட்டிற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக அனைத்து குளங்களும் நிறைந்து நீர் வெளியேறுவதனால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரணைமடு குளம் மற்றும் ஏனைய குளங்களிலிருந்து நீர் வெளியேறுகின்றது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களை சேர்ந்த 2108 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களிற் 442 குடும்பங்களை சேர்ந்த 1442 பேர் நண்பர்கள் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றபோது பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்கள் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. கொவிட் 19 தொற்று ஏற்படும் என்பதற்காக நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இரணைமடு நீர் தேக்கத்திலிருந்து நீரை திறந்து விடவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. எனவே தொடர்ந்தும் தாழ் நில பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்புடன் இருக்குமாறும், அவர்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களிற்கான பாதுகாப்பான அமைவிடங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்களிற்கு அறிவுறுத்தியிருக்கின்றோம்.
இதுவரை மக்களிற்கு பாதுகாப்பான சூழ்நிலையே காணப்படுகின்றது. நீர் வடிந்தோடும் பகுதிகளை ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவத்தின் ஊடாக புனருத்தானம் செய்திருக்கின்றோம்” என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும், தெரிவித்துள்ளார்.
- Advertisement -