நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்கூறப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில், இவ்வாறு 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் மேலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றல் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதேவேளை, மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி மற்றும் உருகாமம் ஆகிய குளங்களின 9 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மக்களை அவதானமாக செயற்படுமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராஜா நாகரத்ணம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, கடும் மழையுடனான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை – வேத்துச்சேனைக் கிராமம் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வேத்துச் சேனைக் கிராமத்தில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
எனினும், திறக்கப்பட்ட வான் கதவுகளின் அளவுகள் அதிகரிக்கப்படலாம் எனவும், கனகராயன் பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பன்னங்கண்டி, கண்டாவளை, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான் மற்றும் உமையாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்திலட யாழ் மாவட்டத்தில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 11 நாட்களில் எண்ணாயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் ஆறாயிரத்து தொள்ளாயிரத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில். கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் நான்காயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். அவர்களில் நான்காயிரத்து 872 பேர் குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாயிரத்து 81 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஆயிரத்து 477 பேர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 220 பேரும், வட மேல் மாகாணத்திற்கு உட்பட்ட புத்தளம் மாவட்டத்தில் தொள்ளாயிரத்து ஐந்து பேரும், சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 42 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையவர்கள் நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இடர்முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.