மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 2021 கல்வி ஆண்டுக்கான, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இதற்கமைய தரம் 2 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் இன்று ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, பாடசாலை கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா கூறியுள்ளார்.
இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தின் சில பாடசாலைகள் ஆரம்பிக்கபட மாட்டாது என வவுனியா மாவட்டம் அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வவுனியா மாவட்டத்திலுள்ள 6 பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகளை தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் ஏனைய பாடசாலைகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காத்தான்குடியில் 25 பாடசாலைகளும் கல்முனையில் 5 பாடசாலைகளும் திருக்கோவில் மற்றும் அம்பாறை கல்வி வலயத்தில் தலா ஒவ்வொரு பாடசாலையும் இவ்வாறு மூடப்படவுள்ளன.