இலங்கைப் போக்குவரத்து சபைக்கு, 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப் பகுதிகளில், நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய 200 சொகுசுப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், விலைமனுக் கோரலின் பிரகாரம், அங்கீகாரம் பெற்ற உள்ளூர் நிறுவனங்களின் ஊடாக, அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம், போக்குவரத்துத் துறை அமைச்சர் காமினி லொக்குகேவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இணையத்தளம் அல்லது இணையத்தளம் அல்லாத வழிமூலம், சிலோன் தேயிலையை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீன நிறுவனமொன்றுடன் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது
சீன தேயிலைச் சந்தையில் நிலவும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இணையத்தளம் மற்றும் இணையத்தளம் அல்லாத தளங்கள் ஊடாக, தூய்மையான சிலோன் தேயிலையை விற்பனை செய்ய, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக, கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் காணிகளை ஒதுக்கவும், அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ஏழு மாவட்டங்களில் காணப்படும் 354 தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
இதற்காக, தோட்ட நிர்வாகங்களுக்கு கீழ் உள்ள அரச தோட்டங்களில், இரண்டு ஏக்கர் காணிகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.