இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கான கூட்டு செயற்குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
காணொலி தொழிநுட்பம் மூலம் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கை கடற்பரப்புக்களில் இந்திய மீனவர்களின் ஊடுருவல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளினதும் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரின் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இத்துடன், இரு நாட்டினது மீனவர்களும் அரேபிய கடலுக்குள் நுழைவதற்கு பாதுகாப்பான பாதை ஒன்றினை அமைக்க வேண்டும் என இலங்கை குறித்த கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.