மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த 18 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தலைமையில் 350 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டதாக மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.