சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு பிரிவில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இந்த விடயத்தை எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறைச்சாலைகள் பாதுகாப்பு விசேட பிரிவில் ஓய்வு பெற்ற 200 இராணுவ வீரர்களை இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மேலதிகமாக, ஓய்வு பெற்ற 300 இராணுவ வீரர்களை சிறைச்சாலைகள் பாதுகாப்பு விசேட பிரிவில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான முழுமையான அனுமதி பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கிடைக்கப் பெற்ற பின்னர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தரப்பினர் சிறைச்சாலைகள் பாதுகாப்பு விசேட பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்ட பின்னர், அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.