2020-2021 ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை பௌர்ணமி தினமான இன்று ஆரம்பமாகியது.
பெல்மதுளை கல்பொத்தாவலை ஸ்ரீ ரஜமகா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை, ஆடை, ஆபரணங்கள் தாங்கிய இரத பவனி, நேற்று காலை ஆரம்பமாகியிருந்தது.
குறித்த இரத பவனி இரத்தினபுரி- கினிகத்தேனை, பெல்மதுளை- பலாங்கொடை, பெல்மதுளை- இரத்தினபுரி, பெல்மதுளை- இரத்தினபுரி ஆகிய நான்கு வழிகளின் ஊடாக, சிவனொளிபாத மலையடிவாரமான நல்லத்தண்ணியை நேற்று மாலை வந்தடைந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமையில் சுகாதர விதிமுறைகளுக்கமைய தெரிவுசெய்யப்பட்ட அளவிளானோரே குறித்த பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து நல்லத்தண்ணியிலிருந்து சிவனொளிபாதமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட திருவுருவ பேழை விசேட வழிபாடுகளோடு நள்ளிரவு 12 மணிக்கு பௌர்ணமி தினத்தோடு பருவ காலம் ஆரம்பமானது.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக யாத்திரிகர்கள் சிவனொளிபதமலைக்கு வருவதை தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், ஒரு தடவையில் 200 யாத்திரிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆறுமாதங்களைக் கொண்ட சிவனொளிபாதமலை பருவகாலம் 2021 ஆண்டு மே மாதம் மௌர்ணமி தினத்தன்று முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.