நாட்டில் 9 பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள், வீதிகள் மற்றும் தொடர்மாடி குடியிருப்புகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 927 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்ட பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல்போன்ற விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி அனுமதி இன்று வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் மற்றும் ஒன்று கூடுபவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுவருட கொண்டாட்டங்களை வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்துமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு எழுமாறாக RAPID ANTIGEN பரிசோதனை இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 8 ஆயிரத்து 500 பேருக்கு, RAPID ANTIGEN பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், இதுவரை 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களுடன் தொடர்புடைய 270 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.