வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.
இந்நிலையில் தடை உத்தரவையும் மீறி வடக்கு கிழக்கின் சில பிரதேசங்களில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தடை உத்தரவையும் மீறி பல பிரதேசங்களில் மக்கள் தத்தமது வீடுகளில் பொதுச்சுடர் ஏற்றி தமது உறவுகளை நினைவு கூர்ந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ் மாவட்டத்திலும் பல இடங்களில் மக்கள் தமது வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள்,ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் நினைவேந்தல் செய்யவோ ஒன்று கூடவோ முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மிகவும் அச்சமான சூழலில் பொதுமக்கள் தமது பிள்ளைகளுக்கு தத்தமது வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேலும், முல்லைத்தீவு நகரம் மற்றும் வன்னிவிளாங்குளம் போன்ற பகுதிகளில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பிராந்திய ஊடகவியலாளர்களின் விபரங்களை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சேகரித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் கிளிநொச்சியிலும் தடைகளிற்கு மத்தியில் மக்கள் தமது வீடுகளில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
பரந்தன் சந்தியில் அஞ்சலி செலுத்த தயாரான ஒருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றையதினம் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நினைவேந்தல் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் மாலை 6.05 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை ஒன்றுகூட்டாது பிரத்தியேக இடம் ஒன்றில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
குறிப்பாக கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்திய முகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடங்கள் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதி ரோந்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மெது செய்தியாளர் தெரிவித்தார்.