புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ஆராயும் குழுவில் இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் உள்வாங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இதேவேளை, வெளிநாடுகளில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக இளைஞர் யுவதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் சுட்டிக்காட்டினார்.
மயிலிட்டி துறைமுகத்தின் பலன்களை அதனை அண்டிய மீனவர்களினால் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.
நாட்டின் வனப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை மறைக்கவே தற்போது, மாடறுப்பு விடயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறுப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொத்துவில் மண்மலை விவகாரமானது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.