வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள் கடந்த தேர்தலில் மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“வடக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு என்ன ஆனது, நீங்கள் எதிர்பார்த்த ஆசனங்கள் கிடைக்கவில்லை. வடக்கில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவான கட்சிகளுக்கு வாக்குகள் ஆதிகமாக கிடைத்தன.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆசனங்கள் கிடைத்தன. தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன் துறை வரை முழு நாட்டிலும் பொதுஜக பெரமுனவுக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தன.
78 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரமாம் ஆண்டுவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பில் நாம் ஒன்றாக பயணித்தோம். இந்த அரசியலமைப்புக்கு மாற்றம் இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியில் கொண்டுவரப்பட்டது.
இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தலில் வெற்றிகொள்ள முடியாத ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக 17 ஆவது திருத்ததை கொண்டுவந்தார்.
இதனால் ஏற்பட்ட சிக்கல் நிலையை கருத்தில் கொண்டே நாம் 2010 ஆம் ஆண்டு 18 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்தினோம் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் பின்னர் என்ன நடந்தது?
மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கவோ, நீதிமன்றத்தை சுயாதீனமயப்படுத்தவோ, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவோ அல்ல.
ரணில் விக்ரமசிங்கவை பலப்படுத்துவதற்காக, அவருடன் இருப்பவர்களது சட்டைப்பையை நிரப்புவதற்காகவே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது” என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.