இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் சட்டவிரோத செயற்பாடுகளின் காரணமாக வடக்கில் இயல்பான முறையில் கடற்றொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்காலப்பகுதியில் வங்கி கடன்களுக்கான வட்டித்தொகைகளை அறவிடுவதற்கான சலுகைக்காலம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரே தடவையில் அறிவிடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், குறித்த செயற்பாடுகளில் ஈடுப்படும் வங்கிகளில் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வொன்றை பெற்றுத்தருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, போக்குவரத்து சார்ந்து வெளிநாட்டுக்கு செல்லும் பெருந்தொகை நிதியை கட்டுப்படுத்த புதிய திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத்சிங் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
“எமது நாட்டில் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்துறையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொலைபேசி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுகின்றது.
இந்த நடவடிக்கைகளின் ஊடாக பாரிய நிதி வெளிநாடுகளுக்கு செல்கின்றது. பாரிய நிதி இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லுகின்றது.
ஆகவே முச்சக்கரவண்டி மற்றும் வாடகைவண்டிகளை ஒழுங்குப்படுத்துவதன் மூலம் அதனுடாக மக்களின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக பல்கலைகழகங்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு புதிய செயலிகளை உருவாக்குவதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் உள்நாட்டு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்தினூடாக இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு தடைசெய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.