கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து வெளியான வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி குறித்த மனு மீதான விசாரணையை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு இன்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதியரசர் சிசிர டி அப்ரூ தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.