போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதற்கமைய, அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
2014 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையொன்றின் போது, போலியான சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண மெண்டிசும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த இருவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விளக்கமறியல் உத்தரவு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த மூன்றாம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.