MT NEW DIAMOND கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு நிபுணர் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 பேர் உள்ளடங்கிய நிபுணர் குழுவினர் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நிபுணர் குழுவினர் கல்முனை பகுதியில் இருந்து படகுமூலம் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் இந்திக்க டீ சில்வா குறிப்பிட்டார்.
இதனிடையே தீப்பரவல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜேர்மனியில் இருந்து தீயணைப்பு துறையின் விசேட குழுவினர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மத்தள விமான நிலையம் ஊடாக குறித்த குழுவினர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் பி. சி.ஆர் சோதனைகளின் பின்னர் MT NEW DIAMOND கப்பல் நிறுத்தப்பட்டுள்ள அருகம்பே பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான MT NEW DIAMOND கப்பலில் எண்ணெய்க்கசிவினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட குழுவினர் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் கண்காணிப்பு விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் குறித்த பகுதிக்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருளை வேறுகப்பலுக்கு மாற்றுவதா அல்லது கப்பலை வேறு துறைமுகத்தக்கு மாற்றுவதா என்பது தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசுபாடு தொடர்பில் ஆராய்வதற்காக இன்று விசேட குழுவொன்று அனுப்பிவைக்கப்டவுள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.