நுண்கடன் நிதி நிறுவனங்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக பல தரப்பிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் WD லக்ஷ்மன் தெரிவித்தார்.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில், சமூக அமைப்புகளுடன் இணைந்து சில திட்டங்களை முன்வைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தின் நுண்நிதிக்கடன் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் கருத்துரைக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் WD லக்ஷ்மன் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறான திட்டங்களை யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு சமூக மட்டத்தில் இருந்து ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ் மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தி தொடர்பில் பணியாற்றும் குழுக்களுடன் இணைந்து நுண்கடன் திட்டம் தொடர்பில் மத்திய வங்கி தீர்வுகளை முவைக்கவுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் WD லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.