நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த வாரம் டுபாய் நாட்டில் இவர் இலங்கையை வந்திருந்தார்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
உயிரிழந்தவர் டுபாய் நாட்டில் இருந்தபொழுது அவருக்கு ஒருவகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததுடன், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அண்மையில் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
எனினும் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என்பதுடன், நீரிழிவு நோயின் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் இன்று காலை நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


