20 ஆவது திருத்தம் ஊடாக சர்வாதிகார ஆட்சி முன்னெடுக்கப்படமாட்டாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரசியலமைப்பு மாற்றங்கள் காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்களை திசை திருப்பும் வகையில் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
ஆனால் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல விடயங்கள் எவையும் அகற்றப்படமாட்டாது.
சர்வாதிகார ஆட்சி முன்னெடுப்பதற்காகவே அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்வதாக இன்று பலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறமாட்டாது.
முழுமையான அரசியலமைப்பு மாற்றம் எதிர்வரும் ஒருவருட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.