பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே இருக்கிறார் எனவும், அவரது சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே இருக்கிறார். அவரது சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
இன்று நேற்றல்ல நீண்டகாலமாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே இருக்கிறார். அவர் தொழில் புரிந்த இடங்களில் சர்ச்சைக்குரியவராகவே இருந்துள்ளார்.
அவருடைய பல சர்ச்சைகள் இருக்கிறது. அவர் பொதுஜன பெரமுன கட்சியை மட்டுமல்ல, உண்மை நிலைமையை கண்டறிந்து வெளிப்படுத்தும் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடனும் முரண்பாட்டுடன் தான் இருந்து வருகிறார்.
அந்தவகையில் ஒரு பொதுமகனாக இருந்து கருத்து சொல்வது வேறு. ஆனால் தேர்தல் அதிகாரியாக இருந்து கொண்டு அப்படி சொல்ல முடியாது. எவ்வாறு அந்த பதவிக்கு வந்தாரோ தெரியாது.
அவர் எப்படி வந்தார் என தெரியாது. ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய சர்ச்சையான கருத்துக்களை தான் கூறுகிறார். அது ஏற்கக் கூடியதல்ல.
அவருடைய சர்ச்சைகள் தொடர்பாக வரலாற்று ரீதியாக ஆவணங்கள் இருக்கின்றன. பொருத்தமான நேரத்தில் அல்லது அவர் இதற்கு பதில் சொல்லும் போது வெளியில் வரலாம். அவை என்னிடம் ஆவணங்களாக உள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.