வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வாரத்தில் சகல மாவட்டங்களுக்கும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான மாதிரி வாக்களிப்புக்கள் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்த மாதிரி வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, மாத்தளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தறை, காலி, மட்டக்களப்பு, மொனராகலை, பதுளை, களுத்துறை, புத்தளம், மன்னார், கொழும்பு, கம்பஹா, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மாதிரி வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதி காலி அம்பலாங்கொட கிராம சேவையாளர் பிரிவில் இவ்வாறான மாதிரி வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.