மாறுபட்ட நேர அட்டவணைகளில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதன் காரணமாக நடைமுறை ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக, அகில இலங்கை பாடசாலை வாகனப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக திறக்கப்பட உள்ளன.
இதற்கமைய முதலாம் கட்டம் இந்த மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன், ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துவருவதற்F திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3 மற்றும் 4ஆம் வகுப்புகளை காலை 7.30 முதல் 11.30 வரையிலும், புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 5ஆம் தர வகுப்புகளை காலை 7.30 முதல் நண்பகல் 12 மணிவரையிலும், நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 6 ஆம் தரம் முதல் 9 ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையிலும், 10 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை காலை 7.30 முதல் மாலை 3.30 வரையிலும், நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாறுபட்ட நேரங்களில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது என, அகில இலங்கை பாடசாலை வாகனப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்த விடயம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.