நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 122ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 65 பேர் இன்றைய தினம் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாக அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு குணமடைந்தவர்களில் 45 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
குறித்த கடற்படையினருக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலம், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இவர்களில் 35 பேர் இராணுவ வைத்தியசாலையிலும், 10 பேர் ஹோமாகமை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என கடற்படை ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குணமடைந்து வீடு திரும்பிய கடற்படையினர் அனைவரும், மேலும் 14 நாட்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 ஆக காணப்படுகின்றது.
அத்துடன், 62 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 726 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 134 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 97 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 17 பேரும், இரணவில வைத்தியசாலையில் 29 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 96 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 52 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 48 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 47 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் 107 பேரும், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் 95 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 80 ஆயிரத்து 302 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.