ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்தமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே காரணமென என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
“சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பணியாற்ற நாம் தயார். சிறிகொத்தவில் உள்ளவர்கள் ஆசன பற்றாளர்கள். தலைமைத்துவம் மற்றும் அதன் உறுப்பினர்களும் அவ்வாறானவர்களே.
எனவே எத்தனை வயது கடந்தாலும் அவர்கள் பதவி ஆவலில் உள்ளனர். இளம் தலைமுறையினருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு அவர்கள் நினைப்பதில்லை. தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறான ஒருவர்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்தமைக்கு ரணில் விக்ரமசிங்க முதன்மை காரணியாவார். மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் சிலரும் அதற்கு பொறுப்பு கூறவேண்டும்.
அரசியல் இலாபத்திற்காகவே அவர்கள் செயற்படுகின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக இதனையே பின்பற்றுகின்றனர் என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்துகின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.