த பினான்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒரு இலட்சத்து 35ஆயிரம் பேருக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுனர் எச்.ஏ.கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
த பினான்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
த பினான்ஸ் நிறுவனத்தின் நிதி வணிகத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் கடந்த மாதம் 22ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் த பினான்ஸ் நிறுவனத்தில் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைப்புச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வைப்பு செய்தவர்களுல் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேருக்கு முதற்கட்டமாக ஆறு இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படவுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள 63 மக்கள் வங்கிக் கிளைகளின் மூலம் குறித்த இழப்பீடுத்தொகை வழங்கப்பட உள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுனர் எச்.ஏ.கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.