தமது ஆதரவாளர்களுக்கு அவன்கார்ட் நிறுவனத்தில் வேலை பெற்று கொடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் தமக்கு கடிதம் அனுப்பியிருந்தாக அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சி வழங்கிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்தபோது தமது ஆதரவாளர்களுக்கு நிறுவனத்தில் வேலை வழங்குமாறு கோரி தனக்கு கடிதம் அனுப்பியிருந்தாக நிஸ்ஸங்க சேனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம், லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஜோன் அமரதுங்க போன்ற அரசியல்வாதிகளும் தமக்கு நெருக்கமானர்களுக்கு வேலை பெற்றுக் கொடுக்குமாறு கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், ராஜித சேனாரத்னவுக்கு தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய தொன் அனுராத செனவிரத்னவுக்கு சொந்தமான நிறுவனமொன்றின் ஊடாக, மீன்பிடிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக பயன்படுத்தப்பட்ட எட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு தமது நிறுவனத்திடம் கோரியதாகவும் நிஸ்ஸங்க சேனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, அதற்காக தாம் கடல் பாதுகாப்பை வழங்கியதாகவும், எனினும் சில மாதங்களின் பின்னர் அந்த மீன்பிடி நடவடிக்கை சட்டவிரோதமானது என தனக்கு அறியக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் சட்டவிரோமானது என தனக்கு அறிய கிடைத்ததன் பின்னர், தான் குறித்த நிறுவனத்திற்கு கடல்பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்தியதாகவும், அதன் பின்னர் ராஜித சேனாரத்ன தன்னுடன் குரோதப் போக்கை கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்காது போனமைக்கு ராஜித சேனாரத்னவின் அவ்வாறான செயற்பாடுகளே காரணம் எனவும் அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.