வெளியுறவு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு வெளியுறவு அமைச்சகத்தில் நேற்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது கொரொனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது இலங்கை மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்கியமைக்கு தினேஷ் குணவர்தன அரபு நாடுகளின் தூதுவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெர்வித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு பகுதிகளில் வாழும் இலங்கையர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அரபு நாடுகளினுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தேயிலைக்கான சந்தை அணுகலை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சந்திப்பின் போது அனைத்து தூதுவர்களும் தமது நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பையும், இலங்கையுடனான தொடர்ச்சியான சிறந்த உறவுகளுக்கான ஆதரவையும், வளைகுடா பிராந்தியத்தில் இலங்கையர்களின் நலனைத் தொடர்ந்து கவனிப்பதற்கும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.