கொழும்பு மாநகருக்கு உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கைச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி வரை சாரதிகளுக்கு விதிமுறைகள் குறித்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் விளக்கமளிக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் பேருந்து முன்னுரிமை ஒழுங்கை சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக தொடங்குவோம், சாலை ஒழுக்கத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.
இதன்படி, காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையிலான காலப்பகுதிக்குள் கொழும்பிற்கு பிரவேசிக்கும் பேருந்துகளும், மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரை கொழும்பில் இருந்து வெளியேறும் பேருந்துகளும் விதி முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒல்கொட் மாவத்தை, ரீகல், குமாரன் ரட்னம் வீதி, பித்தளைச் சந்தி, நூலக சுற்று வட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி வரையிலான மார்க்கத்தில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கைச் சட்டம் அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பிலிருந்து வெளியேறும் பேருந்துகள் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரை கல்கிஸ்ஸ மெலிபன் சந்தியில் இருந்து மொரட்டுவ சிலுவை சந்தி வரையில் இந்தச் சட்டத்தை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.