தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரின் நடத்தை பல்வேறு கேள்விகளை தோற்றுவிப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் நடத்தைகள்,கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் இன்று விவாதப்பொருளாக மாறியுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் இவ்வாறான கருத்துக்களே தேர்தல் கால தாமதமாக காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை பிற்போடுவதற்கு மற்றும் அதனை நடத்தாமல் இருக்க காரணங்களை தேடுவது பிரயோசனமற்றது,தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறுமாதங்களாகின்றன.
நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்,தற்போது கொரோனா பரவல் நாட்டுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை சுகாதார தரப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தற்போது அது பொதுமக்களுக்கு புரிந்துள்ளது,மக்களின் இயல்பு வாழ்க்கையும் வழமைக்கு திரும்பி வருகின்றது,இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரின் நடத்தை கேள்விக்குறியாகியுள்ளதுடன், அது விவாதத்திற்குரியது” என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.