தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு என்பன சமநிலையில் பயணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அக்கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க இதனை கூறியுள்ளார். இவ்வடயம் தொடர்பாக அவர் மேலும் தொரிவிக்கையில்,
“நவம்பர் 16 ஆம் திகதி பாரிய எதிர்ப்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்டவர்கள் இன்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் இலாபமீட்டும் எந்தவொரு செயற்பாடுகளினாலும் தற்போதைய அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது.
தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாதுள்ளமை தெளிவாகின்றது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு என்பன சமநிலையிலேயே காணப்படுகின்றன என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்துகின்றேன்” என சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.