கொழும்பு கம்பஹா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய இன்று முதல் பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, இன்று முதல் சாதாரண முறையில் போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், மேல் மாகாணத்தில் இன்று முதல் போக்குவரத்து சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கொன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேரூந்துகளும் இன்று முதல் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பேருந்துகளில் ஆசன அடிப்படையில் சேவைகளை மேற்கொள்ளும் போது, இலங்கைகப் போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையினரிடம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, தற்போது பதிவுகள் நிமித்தம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பேருந்துகளை தற்காலிகமாக பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று முதல் ரயில் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வழமையான நேர அட்டவணையில் அனைத்து பகுதிகளுக்குமான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்போது 49 அலுவலக ரயில்களை, இன்று முதல் வழமையான கால அட்டணையின் கீழ் சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறுகின்றது,
அத்துடன் உரிய நேரத்தில் இரவு நேர தபால் ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய ரயில் சேவைகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக, யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், முதலாவது ரயிலான உத்தரதேவி ரயில், காங்கேசன்துறையில் இருந்து அதிகாலை 5.30 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 6.10க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.
அத்துடன், யாழ்தேவி ரயில், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.
மேலும், இரவு நேர தபால் புகையிரதம், காங்கேசன்துறையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 6.45க்கு கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.
அத்துடன், நாளை முதல் அதிகாலை 3.45க்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ஶ்ரீதேவி ரயிலும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழமையான போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் அதேவேளை, சுகாதார தரப்பினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.