கொழும்பு கம்பஹா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய நாளை முதல் பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் நாளைமுதல் போக்குவரத்து சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கொன் தெரிவித்துள்ளார்.
பொதுப்போக்குவரத்து சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேரூந்துகளும் நாளை முதல் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாளை முதல் ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறுமென ரயில்வே திணைக்களமும் அறிவித்துள்ளது.
இதன்படி, வழமையான நேர அட்டவணையில் அனைத்து பகுதிகளுக்குமான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்போது 49 அலுவலக ரயில்களை நாளை முதல் வழமையான கால அட்டணையின் கீழ் சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உரிய நேரத்தில் இரவுநேர தபால் ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து போக்குவரத்து நடைமுறைகளின் போதும் சுகாதார தரப்பினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.