பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாளை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்திருந்தது.
சுகாதாரத் தரப்பினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், பொது போக்குவரத்து சேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்ட சில தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய, நாளைய தினம் ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள் மற்றும் சுகாதாரத் தரப்பினரால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளின் பிரகாரம் போக்குவரத்து நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேருந்துகளில் ஆசன அடிப்படையில் சேவைகளை மேற்கொள்ளும் போது, இலங்கைகப் போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையினரிடம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பதிவுகள் நிமித்தம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பேருந்துகளை தற்காலிகமாக பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவைகள் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கிடையிலான பேரூந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என பயணிகள்போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை முதல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.
குறிப்பாக, உரிய திட்டங்களை மேற்கொள்ளாத நிலையிலேயே, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.