தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்றையதினம் மாதிரித் தேர்தலொன்று நடத்தப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேச செயலக பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் குறித்த மாதிரித் தேர்தல் நடைபெற்றுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்கான சிறப்பு ஒத்திகைத் தேர்தலாக இது நடைபெற்றுள்ளது.
இதற்கமைய, அம்பலாங்கொடை விலேகொட தம்மயுக்திகாராம விகாரை வாக்களிக்கும் நிலையமாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைப்பது, வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நேரம் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்த மாதிரித் தேர்தலில் 200க்கும் அதிகமான வாக்காளர்கள் கலந்துகொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.
இதன்போது பொதுத் தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தேர்தல் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை எடுக்குமானால் நாளை நள்ளிரவு பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி, வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விருப்பு இலக்கங்களை அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.