ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பம் அடங்கிய போலி கடிதங்களை தயாரித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி தலைமையக முகாமையாளருக்கு கிடைத்த கடிதம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவரை மீண்டும் சேவைக்கு சேர்த்துக்கொள்ளக் கூறி கடந்த 28 ஆம் திகதி வங்கி முகாமையாளருக்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பம் அடங்கியிருந்த அந்த கடிதத்துடன் வங்கிக்குவந்த நபரை, சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலைப்படுத்த வங்கி நிர்வாகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் தனது மடிக்கணிணியில் குறித்த போலி கடிதத்தை தயார் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், குருணாகலை பகுதியில், குறித்த சந்தேகநபர் வசித்துவந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியப்போது, போலி கடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணிணி மற்றும் பென்ட்ரைவ் என்பன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குருணாகலை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய குறித்த சந்தேகநபரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்த நிதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்படையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபரிம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.