ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், தமது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினது வழிகாட்டலில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார சேவைத்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.
தற்போது சமூகப்பரவல் நாட்டில் இல்லை. கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தேர்தல் நடத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் குறைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களித்திருந்தனர்.
ஆனால் தமிழ் மக்கள் கூட்டமைப்பினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் சொல்லைக் கேட்டு ஏமாற்றமடைந்தனர்.
இந்தமுறை தமிழ் மக்கள் அந்தத் தவற்றினைச் செய்யக்கூடாது. ஏனெனில் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழர்களுக்கு எதையுமே செய்யவில்லை. இனியும் செய்யப் போவதுமில்லை.
மகிந்த ராஜபக்சவினுடைய காலத்திலேயே தமிழ் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் பல நன்மைகள் கிடைத்திருந்தன. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.