மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விதித்து பாரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயற்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் கொரோனா தொற்றுக்கு முன்னதாகவே எரிபொருள் விலை குறைந்தாலும் அதன் பலனை மக்களுக்கு வழங்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்தது.
ஒருவருடம் வரையில் இந்த நிலையை மாற்றம் செய்யப்போவதில்லை என பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளது.
இதனால் கிடைக்க கூடிய பலன் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மற்றுமொரு பக்கத்தில் அரசாங்கம் பருப்பு சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளது.
அரசாங்கம் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் என கூறுகின்றது. நாட்டுக்கு 83 வீதமான சீனி இறக்குமதி செய்யப்பட்டுகின்றது. இவ்வாறு வரியை அதிகரிப்பதால் சீனித் தொழிற்சாலை ஒன்றை உடனடியாக உருவாக்க முடியுமா?
சீனித் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி பின்னரே உற்பத்தியை அதிகரித்ததன் பின்னர் வரியை அதிகரித்திருக்க வேண்டும்.
பருப்பு முழு நாட்டு மக்களும் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவுவகை. பயறு மற்றும் கடலையை இதற்காக பயன்படுத்துமாறு அரசாங்கம் கூறினாலும் அவையும் வெளிநாடுகளில் இருந்தே கொண்டுவரப்படுகின்றன.
இவற்றை பயிரிடக்கூடிய நிலைமை உருவாக்கப்படவில்லை. உண்மையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விதித்து பாரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயற்படுகின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.