இலங்கைக் கிரிக்கெட் அணியில் உள்ளடங்கியுள்ள வீரர்கள் எவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப்பிரிவின் விசாரணையின் கீழ் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை வீரர்களுக்கு எதிராக அவ்வாறான எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நேற்றையதினம் பல ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
குறித்த தகவல்கள் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டழஸ் அழகப்பெரும அளித்த அறிக்கையினை மேற்கோள் காட்டியிருந்ததாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.