கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 35 பேர் குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 287 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த ஐவரும் கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கல்பிட்டிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூவர் மற்றும் விடத்தப்பளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாதிக்கப்பட்டவர்களில் தொள்ளாயிரத்து 26 கடற்படையினரும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அத்துடன், 35 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 590 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 108 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 90 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 3 பேரும், இரணவில வைத்தியசாலையில் 10 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 75 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 34 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 33 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் 105 பேரும், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் 88 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 85 ஆயிரத்து தொள்ளாயிரத்து 67 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 165 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ஆயிரத்து 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 926 பேரும், வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 563 பேரும், ஏனைய 91 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் சமூகத்தில் இருந்து எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.