கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில், வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்துவரும் செயற்றிட்டத்தின் அடுத்த கட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் 825 இலங்கையர்கள் மீள நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக, வெளிநாட்டு உறவுகள் குறித்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இருந்து எதிர்வரும் 11ஆம் திகதியும், மாலைதீவின் மாலே நகரில் இருந்து எதிர்வரும் 13ஆம் திகதியும், பாகிஸ்தானின் லாஹுர் நகரில் இருந்து எதிர்வரும் 15ஆம் திகதியும், 3 விசேட விமானங்களில் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
அத்துடன், இதற்கு மேலதிகமாக, இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில் இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்தியர்கள், பெங்களூர் நோக்கி எதிர்வரும் 15ஆம் திகதியும், புதுடெல்லி நோக்கி எதிர்வரும் 22ஆம் திகதியும், 2 விசேட விமானங்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானியாவின் இலண்டன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி நண்பகல் 12.45 அளவில் நாட்டை வந்தடைந்த UL 504 இலக்க விமானத்தில் 9 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.