வவுனியாவில் மீனவருக்கு கொக்கு ஒன்று நண்பனாக மாறியுள்ளமை அப்பிரதேச மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள பெரியதொரு குளமான குடியிருப்புக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடும் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவருக்கே கொக்கு ஒன்று நண்பனாக மாறியுள்ளது.
கடந்த இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக செல்வது அதிசயமான காட்சியாக உள்ளது.
இது தொடர்பாக மீனவரான சிவானந்தம் கருத்துத் தெரிவிக்கையில், ‘நான் இக்குடியிருப்புக் குளத்தில் இருபது வருடங்களாக மீன்பிடித்து வருகின்றேன். கடந்த பத்து வருடமாக இந்தக் கொக்கு என்னுடனேயே தோணியில் வருகின்றது.
குளத்துக்குள்ளே நான் மீன்பிடிக்க இறங்குவதில் இருந்து தொழில் முடிந்து கரைக்கு வரும் வரை என் கூடவே இக்கொக்கு வருகின்றது. இந்தக் கொக்கு வேறு எவருடைய தோணியிலும் போய் அமர்வதில்லை’ எனத் தெரிவித்தார்.
மேலும், ‘என்னோடு இந்தக் குடியிருப்புக் குளத்தில் எவ்வளவோ பேர் தோணியில் மீன் பிடிக்கிறார்கள். நிறையக் கொக்குகள் வருகின்றன. அவர்கள் போடுகின்ற சின்ன மீன்களை உண்டு விட்டுப் போய் விடும்.
ஆனால் இந்த ஒரு கொக்கு மட்டும் எனது தோணியில் எப்போதும் இருக்கும். நான் மீன்பிடித்து முடிக்கும் வரை என்னுடனேயே இருந்து விட்டு நான் கரைக்கு வந்ததும் பறந்து போய் விடும்’ என்கிறார் சிவானந்தம்.
மேற்படி குளத்தில் மீன்பிடிக்க அவர் தோணியை எடுத்துக் கொண்டு செல்லும் போது, இவரைக் கண்டதும் அந்தக் கொக்கு பறந்து வந்து அவரது தோணியின் முன்பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது. அந்த மீனவர் போடுகின்ற சின்ன சின்ன மீன்களை உண்டு கொண்டு அவருடனேயே தோணியில் பயணம் செய்கிறது அந்தக் கொக்கு.
அந்தக் குளத்தில் பல மீனவர்கள் தோணியில் மீன்பிடிக்கின்ற போதிலும் எங்கிருந்தோ வருகின்ற ஒரு கொக்கு காலை, மாலை வேளையில் குறித்த மீனவரோடு மட்டுமே பயணம் செய்வதுதான் அபூர்வமானதாக இருக்கின்றது.
இந்த அதிசய கொக்கின் நடத்தையை இங்குள்ளவர்கள் வியப்பாகவே நோக்குவதுடன், பிராணிகளின் விநோதமான நடத்தைகள் சிலவற்றைப் புரிந்து கொள்ளவே முடியாதுள்ளதாக இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு அன்றைய காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வருவதையே இவ்விடயம் புலப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
வவுனியா குடியிருப்பு குளத்தில் தொழில்புரியும் அந்த மீனவனுக்கு தொழில் முடியும் வரை துணையாக இருக்கும் அதிசய கொக்கின் நட்பு குறித்த மீனவனுக்குக் கிடைத்தது ஆச்சரியமே!