இந்த வருடம் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வருமான வரி செலுத்தாதோருக்கு அபராத தொகை விதிக்கப்படாது என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகள் சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த தொழில்துறைகளை கொண்டு நடத்த முடியாத நிலை காணப்படுவதால் நான்கு வீத நிவாரண வட்டி விகிதத்தில் கடன் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக பலருக்கும் குறித்த நிவாரண வட்டி வீதத்தில் கடன் கிடைக்கவில்லை.
மத்திய வங்கியை குறித்த நிவாரணத்திற்காக 50 பில்லியன் ரூபாய்களே முன்னதாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நிதியை 150 பில்லியன்களாக அதிகரிக்க ஜனாதிபதி அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைத்துள்ளார்.
இதேவேளை வரி செலுத்தாதோருக்கு தேசிய வருமான திணைக்களம் அபராதத் தொகையை விதிப்பது வழமையாகும்.
எனினும் நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் வருமான வரி செலுத்தாதோருக்கு எந்தவித அபராத தொகையையும் செலுத்த தேவையில்லை என ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய இந்த வருடம் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வருமான வரி தொடர்பான அபராதங்களை விதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.