பொதுத் தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின்போது குறித்த முடிவுகள் எடுக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் முன்னெடுக்கப்பட்ட மாதிரித் தேர்தலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை எடுக்குமானால் நாளை நள்ளிரவு பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி, வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விருப்பு இலக்கங்களை அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடப்படும்.
வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைப்பது, வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நேரம் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து இன்றையதினம் ஆராயப்பட்டது.
குறிப்பாக கைகளை சுத்தப்படுத்தும் முறைமை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இதேவேளை வாக்களிப்பின் போது கைகளை சுத்தப்படுத்துவதற்கு கிருமி ஒழிப்பு திரவத்தை மாத்திரம் பயன்படுத்துவது என தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது.
நீரினால் கைகளை சுத்தப்படுத்தும் போது நீர்த்தன்மை வாக்குச்சீட்டுக்களில் படியும் போது வாக்குச்சீட்டுக்கள் சேதமடையும் நிலை ஏற்படுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.