பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன குறித்த இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்து நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இது குறித்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னர், நாளை மறு தினம் பரீட்சைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுடன் நாளை மறுதினம் முன்னெடுக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்தோ அல்லது பரீட்சைகளை நடத்துவது குறித்தோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதார தரப்பினரால் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையிலான சுற்றுநிரூபம் மாத்திரமே இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.