சாட்சியங்களாக உள்ள எங்களுடைய உறவுகள் இறப்பதற்கு முன் சர்வதேசம் எமக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் 1188 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற சாட்சியங்களாக உள்ள தமது உறவுகள் உயிரிழந்து வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள் மற்றும் மனைவிமார் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு முன்பே உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகளைத் தேடி போராடி வந்த நாகமணி கனகசபை என்பவர் கடந்த மாதம் உயிரிழந்தார்.
அதேபோன்று வவுனியாவில் தனது பிள்ளையை தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று முந்தினம் உயிரிழந்துள்ளார்.
எனவே இவ்வாறு பிள்ளைகளை ஒப்படைத்த சாட்சியாக இருக்கும் நபர்கள் இறந்து போவதற்கு முன்னர் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.