இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 710ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாலை மேலும் 27 பேர் அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 863 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கடற்படை வீரர்கள் 424 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை, இராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரை 11 ஆயிரத்து 669 பேர் வெளியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் – 19 விசேட ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், இராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஐயாயிரத்து 243 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இறுதியாக அடையாளம் காணப்பட்ட 42 கொரோனா தொற்றாளர்களில் 39 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கட்டாரில் இருந்து வருகை தந்த 26 பேரும், குவைட்டிலிருந்து வருகை தந்த மூன்று பேரும், ரஷ்யாவிலிருந்து வருகை தந்த ஒருவரும், டுபாயிலிருந்து வருகை தந்த ஒருவரும் அவர்களில் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த 30 நாட்களில் அடையாளங் காணப்பட்ட எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியே அடையாளங் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.