நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 10 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதன்படி, தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.
வெலிஸர கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாட்டில் 881 கடற்படை வீரர்கள் மற்று அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கபபட்டதோடு, பல தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
மேலும், தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுத்தப்பட்ட கடற்படை வீரர்களில் பலர் தமது தனிடைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துக்கொண்டு வெளியேறிவருகின்றனர்.
இந்த நிலையில், இரணைமடு விமான படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 70 கடற்படை வீரர்கள் இன்று வெளியேறியுள்ளனர்.
முழுமையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்ட வீரர்களே இவ்வாறு வெளியேறியுள்ளதாக இலங்கை வீமானப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவரகளின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக காணப்படுகின்றது.
மேலும், 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 932 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 153 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 100 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 43 பேரும், இரணவில வைத்தியசாலையில் 52 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 92 பேரும், வெலிசர கடற்படை வைத்தியசாலையில் 121 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஹோமாகமை ஆதார வைத்தியசாலை 111 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 45 பேரும், ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் 108 பேரும், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் 96 பேரும், பனாகொட இராணுவ வைத்தியசாலையில் 4 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களை கண்டறிவதற்காக நேற்றைய தினத்தில் ஆயிரத்து 816 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 73 ஆயிரத்து 996 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.