ஐ.பி.எல். இருபதுக்கு 20 தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளை ஆரம்பிப்பதற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், வெளிநாட்டில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படுவது புதிய விடயமல்ல எனவும், முன்னதாக 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டில் சில போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், முடிந்தவரை இந்தியாவிலேயே ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு முன்னுரிமை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.பி.எல் போட்டியை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையும் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.