இந்திய – சீன எல்லை பிரச்சினைகளை இந்தியாவும், சீனாவும் முறையாக கையாண்டு வருவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
இந்திய – சீன இராணுவ உயர் அதிகாரிகள் மேற்கொண்ட கலந்துரையாடலிலன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே சீன வெளிவிவகார அமைச்சினது செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் இந்தியப் படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.
இந்திய – சீன இராணுவ உயர் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து இரு நாட்டினது படைகளும் எல்லையில் ஏற்கனவே இருந்த நிலைகளுக்கு முழுமையாக திரும்பிச் செல்ல வேண்டும் என்றும், இந்திய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சீன ராணுவத்தினர் மீளப் பெறப்பட வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தூதரக வழிமுறை மற்றும் இராணுவ வழிமுறை மூலமாக இரு நாடுகளும் எல்லை பிரச்சினையை முறையாக கையாண்டு வருவதாக சீன வெளிவிவகார அமைச்சினது செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள கருத்தொற்றுமையின் அடிப்படையில், எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இவ்விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சினது செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
பிரச்சினையை விரைவாக தீர்க்கவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் ராணுவ மற்றும் தூதரகரீதியிலான தொடர்பை மேற்கொண்டு வருவதாகவும், இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு இது அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.